கட்டுரை

கமல் ரஜினி கவனத்திற்கு

நாற்காலிக் கனவுகள்

அந்திமழை இளங்கோவன்

திமுகவில் வைகோ அசுர வேகத்தில் வளர்ந்து வந்த காலகட்டமது. 1980 களின் இறுதி. வைகோவின் சென்னை அண்ணா நகர் வீட்டின் முதல் மாடியில் பார்வையாளர்கள் அமருவதற்கான இடத்தில் மு.க வின் வாசகம் பொருந்திய பெரிய புகைப்படம் ஒன்றிருக்கும். அதற்கருகில் மற்றொரு படத்தில் 383 ஆவது குறள் பெரிதாக எழுதப்பட்டு மாட்டப்பட்டிருக்கும். அது:

தூங்காமை கல்வி துணிவுடைமை அம்மூன்றும்   

நீங்கா நிலனாள் பவர்க்கு.

 அங்கு குறளைப் படித்த நண்பரொருவர் இந்தக் குறள்படி பார்த்தால் வைகோ அடுத்த பத்து பதினைந்தாண்டுகளில் தமிழக முதல்வராக வாய்ப்பிருக்கிறது என்றார். இப்படி கணித்தவர்கள் பலர் பிறகு அரசியல் கணிப்பே  சொல்ல முடியாத  சூழலுக்கு அடுத்து நடந்த சம்பவங்கள் தள்ளியது.

கடந்த 70 ஆண்டுகள் தமிழக அரசியலில் இரண்டே இரண்டு பேரால் தான் தாங்கள் ஆரம்பித்த கட்சியை ஆட்சியில் அமர்த்தி அழகு பார்க்க முடிந்திருக்கிறது.

மக்கள் செல்வாக்கை வாக்குகளாக மாற்றும் வித்தை பலருக்கு புரியாத புதிராக இருக்கிறது. பிரபலமான எல்லோர் பின்னணியிலும் வேண்டுமென்றே ஏற்றி விட்டு வேடிக்கை பார்க்கும் ஒரு கும்பல் இருந்து கொண்டே இருக்கிறது. தூண்டி விடுபவர்கள் சாதகங்களை கூறிவிட்டு பாதகங்களை சாமர்த்தியமாக மறைத்து விடுவதுண்டு.

"To win the people, always cook them some savory that pleases them " என்ற கிரேக்க நாடகாசிரியர் அரிஸ்டோபேன்ஸ் வார்த்தைப்படி ஆட்சியைப் பிடித்து விடலாமென்று பலர் நம்புகிறார்கள்.  தமிழகத்தில் பலருக்கு கூட்டம் கூடும். ஆனால் அவை எளிதில் வாக்குகளாக மாறிவிடுவதில்லை.

தமிழக தேர்தலில் கட்சி ஆரம்பித்து தோற்றவர்களில் பெரும்பாலானவர்களிடம் போதுமான கட்டமைப்பு இல்லை என்பது நிதர்சனம்.  ‘சிறப்பாக பயிற்சி பெற்ற அதிகாரிகளும் படைவீரர்களும் கொண்ட படைதான் வெற்றியை ருசிக்கும்' என்ற சன் ட்சு வின் வார்த்தைகளை ஆட்சியைப் பிடிக்க ஆசைப்படுபவர்கள் மனதில் எழுதிக் கொள்ளுங்கள்.

 ‘‘நான் வெற்றிப் படங்களை மட்டுமல்ல வெகு வேகமாக திரையரங்கை விட்டு ஓடும் தோல்விப் படங்களையும் தவறாமல் பார்ப்பேன். தோல்வியடைந்த திரைப்படங்களிலிருந்து என்ன செய்யக் கூடாதென்று நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன்,'' என்ற பொருளில் இயக்குநர் பாக்யராஜ் பலமுறை பேசியதுண்டு.

ஆக்கங் கருதி முதலிழக்குஞ் செய்வினை

ஊக்கா ரறிவுடை யார்.

கட்சி ஆரம்பித்து தோற்றவர்களின் நிலையை வள்ளுவரை விட யாரும் சிறப்பாக சொல்லி விட முடியாது.

என்றும் உங்கள்,

அந்திமழை இளங்கோவன்.

ஏப்ரல், 2018 அந்திமழை இதழ்